குறள் 1091:
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
கலைஞர் உரை: காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை.
குறள் 1092: கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
கலைஞர் உரை: கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!.
குறள் 1093: நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
கலைஞர் உரை: கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது.
குறள் 1094: யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
கலைஞர் உரை: நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா?.
குறள் 1095: குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.
கலைஞர் உரை: அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள்.
குறள் 1096: உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.
கலைஞர் உரை: காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்.
குறள் 1097: செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
கலைஞர் உரை: பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்.
குறள் 1098: அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.
கலைஞர் உரை: நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்.
குறள் 1099: ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.
கலைஞர் உரை: காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்.
குறள் 1100: கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
கலைஞர் உரை: ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன.
குறள் 1081:
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.
கலைஞர் உரை: எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்.
குறள் 1082: நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
கலைஞர் உரை: அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது.
குறள் 1083: பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.
கலைஞர் உரை: கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன். அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை.
குறள் 1084: கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
கலைஞர் உரை: பெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! ஏனிந்த மாறுபாடு?.
குறள் 1085: கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
கலைஞர் உரை: உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே.
குறள் 1086: கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.
கலைஞர் உரை: புருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.
குறள் 1087: கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
கலைஞர் உரை: மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது.
குறள் 1088: ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.
கலைஞர் உரை: களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் என் வலிமை இதோ இந்தக் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே!.
குறள் 1089: பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.
கலைஞர் உரை: பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?.
குறள் 1090: உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
கலைஞர் உரை: மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்.
குறள் 1071:
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
கலைஞர் உரை: குணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.
குறள் 1072: நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.
கலைஞர் உரை: எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!.
குறள் 1073: தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
கலைஞர் உரை: புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.
குறள் 1074: அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
கலைஞர் உரை: பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள்.
குறள் 1075: அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
கலைஞர் உரை: தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.
குறள் 1076: அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
கலைஞர் உரை: மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.
குறள் 1077: ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.
கலைஞர் உரை: கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈ.கைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள்.
குறள் 1078: சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.
கலைஞர் உரை: குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.
குறள் 1079: உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.
கலைஞர் உரை: ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்.
குறள் 1080: எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.
கலைஞர் உரை: ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்.
குறள் 1061:
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.
கலைஞர் உரை: இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச்சிந்தையுடைவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்.
குறள் 1062: இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
கலைஞர் உரை: பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.
குறள் 1063: இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.
கலைஞர் உரை: வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை.
குறள் 1064: இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.
கலைஞர் உரை: வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது.
குறள் 1065: தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.
கலைஞர் உரை: கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.
குறள் 1066: ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.
கலைஞர் உரை: தாகம் கொண்டு தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை.
குறள் 1067: இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.
கலைஞர் உரை: கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்.
குறள் 1068: இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.
கலைஞர் உரை: இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது, இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும்.
குறள் 1069: இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
கலைஞர் உரை: இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது.
குறள் 1070: கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.
கலைஞர் உரை: இருப்பதை ஒளித்துக்கொண்டு இல்லை என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ?.
குறள் 1051:
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.
கலைஞர் உரை: கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல.
குறள் 1052: இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
கலைஞர் உரை: வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்.
குறள் 1053: கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.
கலைஞர் உரை: உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும்.
குறள் 1054: இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.
கலைஞர் உரை: இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈ.வது போன்ற பெருமையுடையதாகும்.
குறள் 1055: கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.
கலைஞர் உரை: உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்.
குறள் 1056: கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.
கலைஞர் உரை: இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்.
குறள் 1057: இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.
கலைஞர் உரை: இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்.
குறள் 1058: இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.
கலைஞர் உரை: வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை.
குறள் 1059: ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.
கலைஞர் உரை: இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.
குறள் 1060: இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.
கலைஞர் உரை: இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது. தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே.
குறள் 1041:
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
கலைஞர் உரை: வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.
குறள் 1042: இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
கலைஞர் உரை: பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது.
குறள் 1043: தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.
கலைஞர் உரை: ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.
குறள் 1044: இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.
கலைஞர் உரை: இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்.
குறள் 1045: நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
கலைஞர் உரை: வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்.
குறள் 1046: நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.
கலைஞர் உரை: அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்.
குறள் 1047: அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
கலைஞர் உரை: வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்.
குறள் 1048: இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.
கலைஞர் உரை: கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.
குறள் 1049: நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.
கலைஞர் உரை: நெருப்புக்குள் படுத்துக் தூங்குவது கூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்.
குறள் 1050: துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
கலைஞர் உரை: ஒழுங்குமறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு.
குறள் 1031:
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
கலைஞர் உரை: பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.
குறள் 1032: உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
கலைஞர் உரை: பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.
குறள் 1033: உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
கலைஞர் உரை: உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.
குறள் 1034: பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
கலைஞர் உரை: பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.
குறள் 1035: இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
கலைஞர் உரை: தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.
குறள் 1036: உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.
கலைஞர் உரை: எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்.
குறள் 1037: தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
கலைஞர் உரை: ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.
குறள் 1038: ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
கலைஞர் உரை: உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.
குறள் 1039: செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.
கலைஞர் உரை: உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்.
குறள் 1040: இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
கலைஞர் உரை: வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.
குறள் 1021:
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.
கலைஞர் உரை: உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.
குறள் 1022: ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
கலைஞர் உரை: ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.
குறள் 1023: குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
கலைஞர் உரை: தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.
குறள் 1024: சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.
கலைஞர் உரை: தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.
குறள் 1025: குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
கலைஞர் உரை: குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்.
குறள் 1026: நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
கலைஞர் உரை: நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்.
குறள் 1027: அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.
கலைஞர் உரை: போர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு.
குறள் 1028: குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.
கலைஞர் உரை: தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்.
குறள் 1029: இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.
கலைஞர் உரை: தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கி கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்.
குறள் 1030: இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.
கலைஞர் உரை: வரும் துன்பத்தை எதிர் நின்று தாங்கக் கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடியை அத்துன்பம், வென்று வீழ்த்திவிடும்.
குறள் 1011:
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
கலைஞர் உரை: ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.
குறள் 1012: ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.
கலைஞர் உரை: உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்.
குறள் 1013: ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.
கலைஞர் உரை: உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்.
குறள் 1014: அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.
கலைஞர் உரை: நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும். அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்.
குறள் 1015: பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.
கலைஞர் உரை: தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்.
குறள் 1016: நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.
கலைஞர் உரை: பரந்த இந்த உலகில் பாதுகாப்பையும்விட, நாணம் எனும் வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக் கொள்வார்கள்.
குறள் 1017: நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.
கலைஞர் உரை: நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்.
குறள் 1018: பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
கலைஞர் உரை: வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்.
குறள் 1019: குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.
கலைஞர் உரை: கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும். அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்.
குறள் 1020: நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.
கலைஞர் உரை: உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை.
குறள் 1001:
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
கலைஞர் உரை: அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்?.
குறள் 1002: பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
கலைஞர் உரை: யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான்.
குறள் 1003: ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.
கலைஞர் உரை: புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்.
குறள் 1004: எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.
கலைஞர் உரை: யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?.
குறள் 1005: கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.
கலைஞர் உரை: கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.
குறள் 1006: ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.
கலைஞர் உரை: தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான்.
குறள் 1007: அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
கலைஞர் உரை: வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது.
குறள் 1008: நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
கலைஞர் உரை: வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!.
குறள் 1009: அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
கலைஞர் உரை: அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர்.
குறள் 1010: சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.
கலைஞர் உரை: சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்.
குறள் 991:
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
கலைஞர் உரை: யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.
குறள் 992: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
கலைஞர் உரை: அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்.
குறள் 993: உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
கலைஞர் உரை: நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல; நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர்.
குறள் 994: நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
கலைஞர் உரை: நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்.
குறள் 995: நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
கலைஞர் உரை: விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்.
குறள் 996: பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
கலைஞர் உரை: உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும். இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்.
குறள் 997: அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
கலைஞர் உரை: அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்.
குறள் 998: நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.
கலைஞர் உரை: நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்.
குறள் 999: நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
கலைஞர் உரை: நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்.
குறள் 1000: பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.
கலைஞர் உரை: பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும்.
குறள் 981:
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
கலைஞர் உரை: ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்.
குறள் 982: குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
கலைஞர் உரை: நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும். வேறு எந்த அழகும் அழகல்ல.
குறள் 983: அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.
கலைஞர் உரை: அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்.
குறள் 984: கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
கலைஞர் உரை: உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு. பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு.
குறள் 985: ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
கலைஞர் உரை: ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல் என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும்.
குறள் 986: சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
கலைஞர் உரை: சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும்.
குறள் 987: இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
கலைஞர் உரை: தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?.
குறள் 988: இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
கலைஞர் உரை: சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல.
குறள் 989: ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
கலைஞர் உரை: தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.
குறள் 990: சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
கலைஞர் உரை: சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்த உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது.
குறள் 971:
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.
கலைஞர் உரை: ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.
குறள் 972: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
கலைஞர் உரை: பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.
குறள் 973: மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
கலைஞர் உரை: பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈ.டுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்.
குறள் 974: ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
கலைஞர் உரை: தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்.
குறள் 975: பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.
கலைஞர் உரை: அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.
குறள் 976: சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக் கொள் வேம் என்னும்
நோக்கு.
கலைஞர் உரை: பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை.
குறள் 977: இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.
கலைஞர் உரை: சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை.
குறள் 978: பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
கலைஞர் உரை: பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.
குறள் 979: பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.
கலைஞர் உரை: ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்.
குறள் 980: அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
கலைஞர் உரை: பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்.
குறள் 961:
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.
கலைஞர் உரை: கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்.
குறள் 962: சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
கலைஞர் உரை: புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈ.டுபடமாட்டார்.
குறள் 963: பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
கலைஞர் உரை: உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்.
குறள் 964: தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
கலைஞர் உரை: மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்.
குறள் 965: குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
கலைஞர் உரை: குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈ.டுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்.
குறள் 966: புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.
கலைஞர் உரை: இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்?.
குறள் 967: ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
கலைஞர் உரை: தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்.
குறள் 968: மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.
கலைஞர் உரை: சாகாமலே இருக்க மருந்து கிடையாது. அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்.
குறள் 969: மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
கலைஞர் உரை: உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள். அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்.
குறள் 970: இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.
கலைஞர் உரை: மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.
குறள் 951:
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.
கலைஞர் உரை: நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது.
குறள் 952: ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
கலைஞர் உரை: ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.
குறள் 953: நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
கலைஞர் உரை: முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும்.
குறள் 954: அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
கலைஞர் உரை: பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்.
குறள் 955: வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.
கலைஞர் உரை: பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள்.
குறள் 956: சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
கலைஞர் உரை: மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்.
குறள் 957: குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
கலைஞர் உரை: பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்.
குறள் 958: நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
கலைஞர் உரை: என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
குறள் 959: நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
கலைஞர் உரை: விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
குறள் 960: நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்
வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு.
கலைஞர் உரை: தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்.
குறள் 941: மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
கலைஞர் உரை: வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
குறள் 942: மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
கலைஞர் உரை: உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.
குறள் 943: அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
கலைஞர் உரை: உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்.
குறள் 944: மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
கலைஞர் உரை: உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.
குறள் 945: மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
கலைஞர் உரை: உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை.
குறள் 946: இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.
கலைஞர் உரை: அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் இயற்கை.
குறள் 947: தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
கலைஞர் உரை: பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்.
குறள் 948: நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
கலைஞர் உரை: நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).
குறள் 949: உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
கலைஞர் உரை: நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்.
குறள் 950: உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.
கலைஞர் உரை: நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.