அழுக்காறாமை
குறள் 161:
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
கலைஞர் உரை: மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.
குறள் 162: விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
கலைஞர் உரை: யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.
குறள் 163: அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
கலைஞர் உரை: அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
கலைஞர் உரை: தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈ.டுபடமாட்டார்கள்.
குறள் 165: அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
கலைஞர் உரை: பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.
குறள் 166: கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
கலைஞர் உரை: உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.
குறள் 167: அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
கலைஞர் உரை: செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.
குறள் 168: அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
கலைஞர் உரை: பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்.
குறள் 169: அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
கலைஞர் உரை: பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்.
குறள் 170: அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
கலைஞர் உரை: பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை.
No comments:
Post a Comment