புதல்வரைப் பெறுதல்.
குறள் 61:
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
கலைஞர் உரை: அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.
குறள் 62: எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
கலைஞர் உரை: பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.
குறள் 63: தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
கலைஞர் உரை: தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.
குறள் 64: அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
கலைஞர் உரை: சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது.
குறள் 65: மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
கலைஞர் உரை: தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.
குறள் 66: குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
கலைஞர் உரை: தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.
குறள் 67: தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
கலைஞர் உரை: தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.
குறள் 68: தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
கலைஞர் உரை: பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.
குறள் 69: ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
கலைஞர் உரை: நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.
குறள் 70: மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
கலைஞர் உரை: ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.
No comments:
Post a Comment