துறவறவியல் - தவம்.
குறள் 261:
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.
கலைஞர் உரை: எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் தவம் என்று கூறப்படும்.
குறள் 262: தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
கலைஞர் உரை: உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்.
குறள் 263: துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.
கலைஞர் உரை: துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது.
குறள் 264: ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.
கலைஞர் உரை: மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்.
குறள் 265: வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
கலைஞர் உரை: உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்.
குறள் 266: தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
கலைஞர் உரை: அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈ.டுபடுபவர்கள்.
குறள் 267: சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
கலைஞர் உரை: தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்.
குறள் 268: தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
கலைஞர் உரை: தனது உயிர் என்கிற பற்றும், தான் என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.
குறள் 269: கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
கலைஞர் உரை: எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்.
குறள் 270: இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
கலைஞர் உரை: ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்.
No comments:
Post a Comment