Monday, August 23, 2010

நிலையாமை

குறள் 331:
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
கலைஞர் உரை:
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.
குறள் 332:
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
கலைஞர் உரை:
சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.
குறள் 333:
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
கலைஞர் உரை:
நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்.
குறள் 334:
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
கலைஞர் உரை:
வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.
குறள் 335:
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
கலைஞர் உரை:
வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.
குறள் 336:
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
கலைஞர் உரை:
இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாக் கொண்டதாகும்.
குறள் 337:
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
கலைஞர் உரை:
ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்.
குறள் 338:
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.
கலைஞர் உரை:
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.
குறள் 339:
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
கலைஞர் உரை:
நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.
குறள் 340:
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
கலைஞர் உரை:
உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.

No comments:

Post a Comment