குற்றங்கடிதல்
குறள் 431:
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
கலைஞர் உரை: இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.
Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.
குறள் 432: இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
கலைஞர் உரை: மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.
குறள் 433: தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
கலைஞர் உரை: பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.
குறள் 434: குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.
கலைஞர் உரை: குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
குறள் 435: வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
கலைஞர் உரை: முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.
குறள் 436: தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.
கலைஞர் உரை: முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?.
குறள் 437: செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
கலைஞர் உரை: நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்.
குறள் 438: பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.
கலைஞர் உரை: எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈ.யாமல் வாழ்வதுதான்.
குறள் 439: வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
கலைஞர் உரை: எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈ.டுபடக் கூடாது.
குறள் 440: காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
கலைஞர் உரை: தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்.
No comments:
Post a Comment